உடனடியாக சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் மொபைலில் வந்த லிங்க்கை தொட்டார் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் இழந்தார்

அண்ணாநகர்: செல்போனில் வந்த லிங்க்கை தொட்டதும் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதால் தனியார் கம்பெனி ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். சென்னை வானகரம் சக்தி நகரை சேர்ந்தவர் ரகுராம்(40). இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று அவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக ஒரு நம்பரில் இருந்து பேசிய நபர், ‘’குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் பேசுகிறேன்’’ என்று சொல்லி உங்களுக்கு வந்த லிங்க்கை தொட்டு பாருங்கள் உடனடியாக பணம் சம்பாதிக்கலாம்  என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ரகுராம் அந்த லிங்க்கை தொட்டுள்ளார். இதன்பிறகு சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வந்ததும் ரகுராம் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ரகுராம் கொடுத்த புகாரின்படி, அரும்பாக்கம் போலீசார் விசாரித்தனர். ஆனால் இது ஆன்லைன் மோசடி என்பதால் இந்த புகாரை அண்ணாநகர் சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இதுகுறித்து அண்ணாநகர் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கூறும்போது, ‘’ஆன்லைன் வாயிலாகவோ செல்போன் மூலம் குறுந்தகவல் வந்தாலோ எந்தவொரு லிங்க்கையும் தொட்டு பார்க்க கூடாது என்றும் பலமுறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்துவருகிறோம். குஜராத் மாநிலத்தில் இருந்து வங்கியின் மேலாளர் பேசுவதுபோல் பேசி தற்போது பணம மோசடி செய்துள்ளனர். எனவே ஆன்லைன் வாயிலாக வரும் குறுந்தகவல் மற்றும் லிங்க்கை தொடவேண்டாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்’’ என்றார்.

Related Stories: