சென்னையில் தொடரும் ஜில்லென்ற சீதோஷ்ணம்: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 33 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கோடை வெப்பம் சற்று தணிந்து ஜில்லென்ற சீதோஷ்ணம் நிலவுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. கோடை காலம் தொடங்கிய நிலையில், இரவிலும், அதிகாலை நேரங்களிலும் குளிர் நிலவியது. பகல் நேரங்களில் வெயில்  சுட்டெரிக்கவே, வெப்பத்தை எப்படி சமாளிப்பது என்று மக்கள் அஞ்சத்  தொடங்கினர். ஆங்காங்கே கோடை கால கடைகளும் முளைத்தன. பதனீர், நுங்கு,  இளநீர், தர்பூசணி, பழரச கடைகளை மக்கள் நாடத் தொடங்கினர். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆங்காங்கே கோடை மழை கொட்டுவதோடு, காற்றும் வீசுகிறது.

தமிழ்நாட்டில் பல ஊர்களில் இடி, மின்னலுடன் நேற்று மாலை முதல் இரவு  வரை கோடை மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் கோடை வெயில் ஓரளவு தணிந்துள்ளது. இந்நிலையில், வரும் நாட்களில் மழை ஓரளவு பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் தற்போது கோடை காலத்தில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் வரும் 23ம்தேதி வரை இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் எனவும், தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 21, 22, 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்திருக்கிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் 3வது நாளாக நேற்று நள்ளிரவுக்கு மேல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. எழும்பூர்,  புரசைவாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து  வருகிறது.

தொடர்ந்து பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடனும், சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. இதனால் சென்னையில் வீசி வந்த கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது. இரவு நேரங்களில் புழுக்கம் குறைந்து குளுமை பரவியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் இன்று அதிகாலை முதல் சென்னையில் ஜில்லென்ற சீதோஷ்ணம் நிலவி வருகிறது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 33 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: