செம்பரம்பாக்கம் முதல் கோயம்பேடு வரை ரூ.44.33 கோடி மதிப்பீட்டில் குழாய் பதிக்கும் பணி: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

சென்னை:ரூ.44.33 கோடி மதிப்பீட்டில் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் கோயம்பேடு வரை 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் 2வது பிரதான குழாய் பதிக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.  செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு 530 எம்.எல்.டி குடிநீர் வழங்கிடும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 265 எம்.எல்.டி மட்டுமே ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கி வருகிறது. இந்நிலையில் கூடுதலாக 265 எம்.எல்.டி அளவு குடிநீர் வழங்குவதற்கு ஏதுவாகரூ.44.33 கோடி மதிப்பீட்டில் 2ம் பிரதான குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக பூந்தமல்லி புறவழி சாலையில் தேசிய நெடுஞ்சாலை எண்.4 சாலையின் குறுக்கே 20அடி ஆழத்தில் 3000 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட கான்கிரீட் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைக்கு எந்தவிதமான சேதமும் இல்லாமல் நவீன தொழில்நுட்ப உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பின்னர் 2000 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட இரும்பு குழாய்கள் இதனுள் பதிக்கப்படும்.

இந்த இரும்பு குழாய்கள் 120 மீட்டர் நீளத்திற்கு பதிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் இதுவரை 75 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால அளவிற்குள் இப்பணிகள் முடிக்கப்படும். மேலும் கோயம்பேடு வரையிலான குழாய் பதிக்கும் பணிகள் தொய்வின்றி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இப்பணிகள் நிறைவுற்ற பின்னர் கூடுதலாக நாளொன்றுக்கு 265 எம்.எல்.டி அளவு குடிநீர் வழங்கப்படுவதால் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 265 எம்.எல்.டி அளவு குடிநீரும் சேர்த்து நாளொன்றுக்கு 530 எம்.எல்.டி குடிநீர் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் வழங்கப்படும்.

இந்த ஆய்வின் போது சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார், செயல் இயக்குனர் ராஜகோபால் சுன்கரா, பொறியியல் இயக்குனர் சாமி லால் ஜான்சன், தலைமை பொறியாளர் ஜெயகர் ஜேசுதாஸ் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: