தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் மேம்பாலம் கட்டும் பணியால் மாற்றுப் பாதையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் வியாசர்பாடி குட்ஸ் ஷெட்டிற்கு சரக்கு ஏற்றிச் செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் மூடப்படுவதால் மூலக்கடை, வியாசர்பாடி, கொடுங்கையூர் பகுதியில் இருந்து தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் காரணத்தால் இந்த பகுதியில் மேம்பாலம் கட்டவேண்டும் என்று வாகன ஓட்டிகளும், மக்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் ரயில்வே துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்துரூ.106 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பணிகளை தொடங்கி வைத்தார். இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கொடுங்கையூர், வியாசர்பாடி, மூலக்கடை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் எழில்நகர் தொப்பை விநாயகர் கோயில் தெரு, தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி., எண்ணூர் நெடுஞ்சாலை வழியாகச் செல்ல போக்குவரத்து போலீசார் கூறியிருந்தனர்.
ஆனால் வாகனங்கள் செல்லும் இந்த சாலை படுமோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி செல்கிறார்கள். மேலும் தண்டையார்பேட்டை - எண்ணூர் நெடுஞ்சாலையில் ஐ.ஓ.சி. பேருந்து நிலையத்தில் இருந்து பவர்ஹவுஸ் பேருந்து நிறுத்தம்வரை சாலையில் ஒரு பக்கம் தோண்டப்பட்டுள்ள காரணத்தால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாற்றுப்பாதையை சரி செய்யாமல் குண்டும் குழியுமாக வைத்திருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருவொற்றியூரில் இருந்து செங்குன்றம் நோக்கி மாநகரப் பேருந்து தடம் 157 பேருந்து இயக்கப்படுகிறது. இதில் அதிகளவு மக்கள் பயணம் செய்கிறார்கள். திருவொற்றியூரில் இருந்து தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி வழியாக மூலக்கடை சென்று வாகனங்கள் செங்குன்றத்துக்கு செல்வது வழக்கம். திருவொற்றியூரில் இருந்து செங்குன்றத்திற்கு செல்வதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். ஆனால் தற்போது திருவொற்றியூரில் இருந்து தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, மூலக்கொத்தளம், தங்கச்சாலையில் இருந்து மீண்டும் மூலக்கொத்தளம், வியாசர்பாடி வழியாக மூலக்கடை சென்று அங்கிருந்து செங்குன்றத்துக்கு செல்வதால் 2 மணி நேரத்துக்கும் மேலாகிறது. செங்குன்றத்திற்குச் செல்வதற்கும், வருவதற்கும் இதே வழிதான். இதனால் இந்த பேருந்தில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்த பாலம் கட்டிமுடிக்க 2 ஆண்டுகள் ஆகும் என்று அதிகாரிகள் கூறும் நிலையில் மாற்றுப் பாதை, பேருந்துகள் செல்லும் வழித்தடத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி மேயர், போக்குவரத்து அதிகாரிகள், ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து பேசி, சரியான திட்டமிட்டு இந்த மாற்றுப் பாதையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.