பயணிகள் கூட்ட நெரிசல், கால தாமதம் பிரச்னைக்கு தீர்வாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை திட்ட பணிகள்: விரைவில் திட்ட அறிக்கை தயார்

* ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை அமைப்பதற்கு விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், இந்த திட்ட பணிகள் 3 ஆண்டுக்குள் முடிக்கப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கம் முக்கிய ரயில் போக்குவரத்து தடமாக உள்ளது. இந்த தடத்தில் தினமும், 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினசரி 5 லட்சம் பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு முன், போதிய ரயில் பாதை இல்லாததால், சென்னை கடற்கரையில் புறப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே அதிகளவில் இயக்கப்பட்டன. புறநகர் பகுதிகளின் அசுர வளர்ச்சியாலும், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், மஹிந்திரா சிட்டி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும், சென்னைக்கு வந்து பணிபுரிவோர் எண்ணிக்கை அதிகரித்தது.

அதேபோல், புறநகர் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் ஐ.டி., நிறுவனங்களில் சென்னையில் வசிக்கும் பலர் பணியாற்றுகின்றனர். புறநகரில் உள்ள பிரபல கல்லூரிகளில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் வசதிக்காக, கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்களை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என, பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல், செங்கல்பட்டு வரை கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

அதன்பேரில், செங்கல்பட்டு வரை கூடுதல் ரயில்களை இயக்க,ரூ.598 கோடியில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கி.மீ., தொலைவுக்கு 3வது பாதை அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு  வந்தது. தற்போது புறநகர் ரயில் சேவைக்கு பிரத்யேகமாக ஒரே ஒரு பாதை மட்டுமே  உள்ளது. மேலும் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படுகிறது.  இந்த நிலையில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது புதிய ரயில் பாதை  அமைக்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. வழக்கமாக இந்திய  ரயில்வேதான் இது போன்ற திட்டங்களை மேற்கொள்கிறது. ஆனால் புதிதாக  உருவாக்கப்பட்ட சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம், புறநகர்  பயணிகளுக்கு தடையில்லாத பயண சேவையை வழங்கவும், சாலைகளில் போக்குவரத்து  நெரிசலை குறைக்கவும் இந்த முயற்சியை எடுத்துள்ளது. இதற்கான விரிவான திட்ட  அறிக்கையை தயாரிப்பதற்கு ஆலோசகரை நியமிக்க விரைவில் டெண்டர் வெளியிடப்பட  உள்ளது.  

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 4வது ரயில் பாதையை முடிக்க  திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கூடுதல் பாதை அமைக்கப்பட்டவுடன் புறநகர்  சேவைகளுக்காக 2 பிரத்தியேக ரயில்பாதைகள் இருக்கும். இதன்மூலம் சென்னை  கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ஒரு ரயில்  விடப்பட உள்ளது. ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை அமைத்தால், பயணிகள் கூடுதல் ரயில் சேவையை பெறுவர். இதன் மூலம் காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசல், கால தாமதம் தவிர்க்கப்படும். இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசு விரைவில் திட்ட அறிக்கை தயார் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அது தொடர்பான விவரங்கள் எங்களிடம் கிடைத்த உடன் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்படும்,’’ என்றார்.

* கூடுதல் சேவை அவசியம் சென்னை நகர மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை உள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, சென்ட்ரல் - திருவள்ளூர் - திருத்தணி - அரக்கோணம் மார்க்கங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறைந்த கட்டணம், விரைவு பயணம் என்பதால் புறநகர் பகுதி மக்கள் சென்னை நகருக்குள் வந்து செல்ல பெரும்பாலும் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் மக்களின் பிரதான போக்குவரத்துக்கு மின்சார ரயில் சேவையை பயன்படுத்துவதால் காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படுகிறது. எனவே, கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

* பீக் ஹவர்சில் நெரிசல் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தட ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழித்தடத்தில் காலை, மாலை நேரங்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் காணப்படுவதால், கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்தி கூடுதல் மின்சார ரயில்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

**********************************************************

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை மருந்தீஸ்வரர் கோயிலில் வருடம்தோறும் பங்குனி திருவிழா 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வரும் 25ம் தேதி இரவு ஊர்க்காவல் எல்லை தெய்வமான ஸ்ரீ செல்லியம்மன் வீதி உலாவும், 26ம் தேதி இரவு ஸ்ரீ விநாயகர் வீதி உலாவும் நடக்கிறது. 27ம் தேதி இரவு 9 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம், யாகசால பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடக்கிறது.  28ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகரர் சூரிய பிரபையில் காமதேனுக்கு காட்சியருளல், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு சந்திரபிரபையில் காட்சி அருளல் மற்றும் தியாகராஜர் வீதி உலா நடக்கிறது. 29ம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு காட்சியருளல், இரவு 8.30 மணிக்கு பூத வாகனத்தில் சந்திரனுக்கு காட்சியருளல் மற்றும் தியாகராஜர் 3ம் திருப்பவனி பார்த்தசாரதிக்கு அருளல், 30ம் தேதி காலை 9 மணிக்கு பிருங்கி முனிவருக்கு காட்சி அருளல், இரவு 8.30 மணிக்கு நாக வாகனத்தில் காட்சியருளல் மற்றும் தியாகராஜர் 4ம் திருப்பவனி சந்திரனுக்கு அருளல், 31ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகர் தொட்டித் திருவிழா, எமதர்மருக்கு அருளல் மற்றும் இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா, தியாகராஜர் 5ம் திருப்பவனி ராமபிரானுக்கு அருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஏப்ரல் 1ம் தேதி  காலை 9 மணிக்கு சந்திரசேகரர் இரட்சகவிற்கு அருளல், இரவு 8.30 மணிக்கு யானை வாகனத்தில் காட்சியருளல் மற்றும் ஸ்ரீ தியாகராஜர் 6ம் திருப்பவனி இந்திரனுக்கு அருளல், 2ம் தேதி காலை 6 மணிக்கு சந்திரசேகரர் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு புஷ்ப விமானம் மற்றும் தியாகராஜர் வீதி உலா நடக்கிறது. 3ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகரர் 4 மறைகளுக்கு அருளல், மாலை 6 மணிக்கு சந்திரசேகரர் பரிவேட்டை விழா மற்றும்  தியாகராஜர் வீதி உலாவும், 4ம் தேதி  பிற்பகல் 2 மணிக்கு கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம், மாலை 6.30 மணிக்கு அகத்தியருக்கு திருமணக் காட்சி அருளல் மற்றும் 10 மணிக்கு தியாகராஜர் வீதி உலாவும், 5ம் தேதி காலை 10 மணிக்கு சந்திரசேகரர் கடல் நீராடல் மற்றும் இரவு 9 மணிக்கு திருப்புரசுந்தரி தியாகராஜ சுவாமி திருமண விழாவும் நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து கொடியிறக்கம், வால்மீகி முனிவருக்கு 18 திருநடனக் காட்சி வீடுபேறு அளித்தல், பெருஞ்சிறப்பு விழா நடக்கிறது. கடைசி நாள் திருவிழாவாக 6ம் தேதி மாலை 6 மணிக்கு சந்திரசேகரர் தெப்பத் திருவிழாவும், இரவு 9 மணிக்கு வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலாவும், அதனைத் தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு தியாகராஜர் திருபுரசுந்தரி அம்மனுக்கு அருளல்,  பந்தம்பரி 18 திரு நடன பெருஞ்சிறப்பு விழாவும் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி ஆலய வளாகத்தில் தினமும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவும் கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜாஇளம்பெருவழுதி மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: