நியாயம் எங்கள் பக்கம் உள்ளது நீதி கிடைக்கும் வரை சட்ட போராட்டம் நடத்துவோம்: ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் பேச்சு

சென்னை: நியாயம், நீதி எங்கள் பக்கம் உள்ளதால், நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் நடத்துவோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்: அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்த தடை கோரி வழக்கு தொடுத்திருந்தோம். அதன்படி, நீதிபதி குமரேஷ்பாபு வழக்கினை விசாரித்தார். எங்களுடைய தரப்பில் கடந்த 17ம் தேதி வழக்கினை விசாரித்து அனைத்து தரப்பு வாதங்களுக்கும், பதில் மனுக்களுக்கும், அடுத்த மாதம் 11ம் தேதி தள்ளிவைத்திருந்த நிலையில், அவசரமாக இந்த தேர்தலை நடத்துவது ஏன் என்ற கேள்வியை எழுப்பினோம். இதன் காரணமாக வழக்கினை வரும் 22ம் தேதி வரை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

அதன் பின்னர் இந்த மனுமீதான முழு விசாரணை முடிந்த பின்னர் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார். அதுவரை பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தலாம், ஆனால் முடிவினை வெளியிட கூடாது என நீதிபதி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறார். மேலும், சட்டவிரோதமாக கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என குரல்கொடுத்து அந்த கேள்வியையும் நீதிமன்றத்தில் எழுப்பி உள்ளோம். நீதிமன்றம் அதனை ஆராயும் என்று தெரிவித்துள்ளது. அதனை ஆராயும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என கூறியது எங்களின் வெற்றியாக பார்க்கிறோம். எங்களை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி யார்?. கூவத்தூரில் இருந்த கும்பல் எங்களை நீக்கினால் அது செல்லுமா. ஆகவே தான் நீதிமன்றத்தினை நாடி எங்களின் உரிமையை பாதுகாத்துக்கொள்கிறோம்.

அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தலில் இபிஎஸ் போட்டியிட்டால் ஓபிஎஸ் போட்டியிடுவேன் என கூறியுள்ளார். இபிஎஸ் முடிந்தால் அறிவிக்கட்டும் அடிப்படை உறுப்பினர்கள் இடையே தேர்தல் வைத்தால் ஓபிஎஸ் போட்டியிட தயார். 2026ம் ஆண்டு வரை ஓ.பி.எஸ் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். தேர்தலை வைத்து பாருங்கள் யாருக்கு பலம் இருக்கிறது என்பதை பார்க்கலாம். குறுக்கு வழியில் வர பார்த்தால் அதை நாங்கள் விட மாட்டோம். அதிமுக தலைமை கழகத்திற்கு எங்கள் தரப்பில் இருந்து யாரும் போகப்போவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: