பொன் விழா ஆண்டில் முதல்வர் அறிவித்தபடி இனிமேல், காலை 8 மணிக்கு பெண் காவலர்கள் அணிவகுப்பு: மாநகர காவல்துறையில் அறிமுகமானது

சென்னை: பொன்விழா ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி, நேற்று முதல் சென்னை மாநகர காவல்துறையில் பெண் காவலர்களின் அணிவகுப்பு காலை 8 மணிக்கு நடந்தது. அப்போது, பெண் காவலர்கள் ஆண் காவலர்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு காவல்துறையில், மகளிர் காவலர்களின் 50வது பொன்விழா ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நேரு  விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் குறிப்பாக, பெண் காவலர்கள் குடும்ப தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான காவல் பணியையும் செய்து வருவதால், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘ரோல் கால்’ எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு இனி மேல் காலை 7 மணி என்பதற்கு பதிலாக, 8 மணி என்று மாற்றியமைக்கப்படும்.முதல்வர் அறிவிப்பை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று காவல்துறையில் நடைமுறைப்படுத்தினர்.

அதைதொடர்ந்து மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் நேற்று காலை வழக்கமாக 7 மணிக்கு நடைபெறும் காவல் வருகை அணிவகுப்பு, முதல்வர் உத்தரவுப்படி 8 மணிக்கு நடந்தது. முதல்வரின் இந்த அறிவிப்பை பெண் காவலர்கள் மகிழ்ச்சியுடன் சக பெண் காவலர்கள் ஆண் காவலர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Related Stories: