புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடந்த தேர்வில் 5 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை:  தமிழ்நாடு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட, எழுதப்படிக்க தெரியாத வயது வந்தோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில்  5 லட்சத்து 28 ஆயிரம் எழுத்தறிவற்றவர் கள் கல்வி கற்று வருகின்றனர். அதற்காக  28 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து  இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள அனைவருக்கும் 19ம் தேதி  அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்க அறிவிக்கப்பட்டது.

இதன்படி  இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட கற்போர் மையங்கள், வட்டார வள மையங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் அடிப்படை எழுத்தறிவு தேர்வு எழுத பதிவு செய்தனர். அவர்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இதற்காக 28 ஆயிரத்து 848 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 664 பேர் பெண்கள், 1 லட்சத்து 74 ஆயிரத்து 183 பேர் ஆண்கள், மாற்றுப் பாலினத்தோர் 153 பேர் அடங்குவர்.

Related Stories: