அதிமுகவை அழிவுப்பாதையை நோக்கி கொண்டு செல்கிறார்கள் தமிழ்நாட்டில் எடப்பாடி எங்கு சென்றாலும் அவரை நோக்கி எதிர்ப்பு அலை பாயும்: ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை

சென்னை: எடப்பாடி அணியினர் அதிமுகவை அழிவுப்பாதையை நோக்கி கொண்டு  செல்கிறார்கள். தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் எடப்பாடி பழனிசாமியை நோக்கி  எதிர்ப்பு அலை தொடர்ந்து பாயும் என்று ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார். அதிமுக  பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி, எடப்பாடி  பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன்  இணைந்து நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில்  நிருபர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது: எடப்பாடி  பழனிசாமி தரப்பினர் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர்.

இது  மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. தேர்தல் என்றால் முறைப்படி வாக்காளர்  பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பாளர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.  அதன்பிறகே தேர்தல் நடைபெற வேண்டும். தற்போது அறிவித்துள்ளது திடீர்  சாம்பார், திடீர் ரசம் என்பதுபோல் தேர்தலை அறிவித்துள்ளனர்.  அதிமுக தேர்தலை முறைப்படி நடத்த சட்டவிதிகள் உள்ளன. அதற்கு மாறாக, அவர்கள்  விருப்பத்திற்கு ஏற்ப திடீர் தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். இவை  அனைத்தும் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையத்தில் இருக்கும்போது இதுபோன்று  அறிவித்து இருப்பது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயல். இதை கண்டிக்கிறோம்.  சட்டரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறோம்.  

அதிமுக என்ற மாபெரும்  இயக்கத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்திருப்பது வேதனையாக இருக்கிறது. தொடர்ந்து அதிமுகவை அழிவுப்பாதையை நோக்கி எடப்பாடி அணியினர்  வேகமாக கொண்டு செல்வதாக தொண்டர்கள் நினைக்கிறார்கள். நிரந்தர பொதுச்செயலாளர்  ஜெயலலிதா என்ற நிலையை மாற்றி, தனக்கு தானே பட்டம் சூட்டிக்  கொண்டிருக்கிறார் எடப்பாடி. தானும், தன்னை சுற்றி இருப்பவர்கள்தான்  பதவிக்கு வர வேண்டும் என்று சட்ட விதிகளை திருத்துவது எந்தவகையில் நியாயம்.  இதை எதிர்த்துதான் உச்ச நீதிமன்றம் சென்றோம். இப்போது எங்களுடைய பயணம்  மக்கள் தீர்ப்பை நோக்கி செல்ல இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் சிவகங்கை சென்றபோதுகூட  விமான நிலையத்தில் ஒரு பயணி எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பேசினார் என்பது  அனைவருக்கும் தெரியும்.

அதுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் நிலவி  நிற்கிறது. இதுபோன்ற எதிர்ப்பலை அவர் நோக்கி தொடர்ந்து பாயும். அதுபோன்ற  ஒரு நிலையை அவர் உருவாக்கி இருக்கிறார். நாங்கள்  உருவாக்கவில்லை.  எங்களை கட்சியில் இருந்து நீக்கும்  அதிகாரம், தகுதி யாருக்கும் கிடையாது. பெரும்பாலான எம்எல்ஏக்கள்  எங்களுக்குதான் ஆதரவு என்று கூறுகிறார்கள். அது 5 வருடத்தில் காலாவதியாகி  விடும். உச்சபட்ச சர்வாதிகாரியாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக்  கொண்டிருக்கிறார். ஏப்ரல் மாதம் 2வது வாரம்  திருச்சியில் மாநாடு நடத்துவோம். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும்  தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க இருக்கிறோம்.  அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில  தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்  என்று அண்ணாமலை சொல்லி இருப்பது அவருடைய  கருத்து. அதற்குள் நாங்கள் செல்ல  விரும்பவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* பொதுச்செயலாளர் பதவியை பிக்பாக்கெட் அடிக்கிறார்கள்

5  ஆண்டுக்கு ஒருமுறை அதிமுக கழக அமைப்பு ரீதியான தேர்தல் நடத்தப்பட வேண்டும்  என்பதுதான் விதி. எதுவுமே முறைப்படி இல்லாமல்  பிக்பாக்கெட் அடித்துக் கொண்டு போவதுபோல் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக பொதுக்குழுவை  குண்டர்களை வைத்து நடத்தினார்கள். இப்போது எனக்கு தண்ணி பாட்டிலை  பார்த்தாலே ஒரு அலர்ஜி ஏற்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 63 ஆயிரம் வாக்குகள்  வித்தியாசத்தில் அதிமுகவை தோற்கடிக்க வைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று  ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக கூறினார்.

* சிறுபிள்ளைகள் போல் விளையாடுகிறார்கள்

சிறுபிள்ளைகள்  மணல் வீடு கட்டுவதுபோல் விளையாடிக்  கொண்டிருக்கிறார்கள். தொண்டர்களின்  மூச்சு காற்றால் அவர்கள் தூக்கி  எறியப்படுவார்கள். தொண்டர்கள்  பொதுச்செயலாளர் தேர்தலை புறக்கணியுங்கள்  என்று கேட்டுக் கொள்கிறோம்.  நீதிமன்றம், தேர்தல் ஆணையம் முன்பு வழக்கு இருக்கிறது. யாரும் அவர்களுக்கு  அனுமதி கொடுக்கவில்லை. ஈரோடு கிழக்கில்  ஏற்பட்ட தோல்விக்கு பிறகும்புத்தி வரவில்லை. மாவட்டங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை  சந்திப்போம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

Related Stories: