காவல்நிலையத்தை சூறையாடிய விவகாரம் சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங் கைது?பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம்; இன்டர்நெட் சேவை துண்டிப்பு

சண்டிகர்: சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங் கை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான அம்ரித்பால் சிங், தன்னைத் தானே மதபோதகர் என அழைத்து கொள்கிறார். அம்ரித்பாலின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து அஜ்னாலா பகுதி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். லவ்பிரீத் சிங்கை விடுவிக்க வலியுறுத்தி, அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் கைகளில் வாள், துப்பாக்கிகளை ஏந்தியவாறு, கடந்த வாரம் அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சூறையாடினர்.

இதில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 6 போலீசார் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் 6 பேரை பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தினர். ஆனால், அம்ரித்தை கைது செய்தால் கலவரம் ஏற்பட்டு, பஞ்சாப்பில் நடைபெற்று வரும் ஜி20 கூட்டம் பாதிக்கப்படும் என, கைது நடவடிக்கையை தாமதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜலந்தரின் ஷாகோட் பகுதிக்கு அம்ரித் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, ஆதரவாளர்களின் வாகனங்கள் புடைசூழ சென்று கொண்டிருந்த அம்ரித்பால் சிங்கை, பஞ்சாப் சிறப்பு போலீசார் விரட்டி வருகிறார்கள். இதற்காக  மாநிலம் முழுவதும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட் டது. மாநிலத்தில் அமைதியை காக்க போலீசார் முழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் அரசு கேட்டு கொண்டுள்ளது.

Related Stories: