ஆலமர விதை போல் இருந்து எதிர்கால இந்தியாவை விருட்சமாக வேண்டும்: மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை

சென்னை: ஆலமரத்தின் விதைகள்போல் இருந்து எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும் என அன்னை வயலட் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா அம்பத்தூர் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி நிறுவன தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினரான ஆளுனர் ஆர்.என்.ரவி, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி புதிதாக கட்டியுள்ள வெள்ளி விழா கட்டிடத்தை திறந்து வைத்து விழா மலரை வெளியிட்டு பேசியதாவது: இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகிறது.

கொரோனா காலத்தில் உலக நாடுகள் பொருளாதாரத்தில் பின்நோக்கி சென்று விட்டது. இருந்த போதிலும் இந்தியா விரைவாக மீண்டெழுந்து வேகமாக வளர்ந்து வருகிறது. கொரோனா காலத்தில் உலகில் உள்ள 150 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டன.  இந்த கல்லூரி 50வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் போது, இந்தியா 100 ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும். பட்டம் பெற்றுள்ள அனைவருக்கும் நிறைய பொறுப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பம் நன்றாக வளர்ந்து இருக்கிறது. இதை தவறாக பயன்படுத்தாமல் ஆக்கப்பூர்வமான  செயல்களுக்கு பயன்படுத்த வேண்டும். மாறிவரும் உலகில் சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

தோல்வி அடைந்தாலும் முயற்சி  செய்து கொண்டே இருக்க வேண்டும். உங்களது சிந்தனைகள் சிறப்பாகவும் உயர்ந்ததாகவும் இருக்கவேண்டும். ஆலமரத்தின் விதைகள்போல் இருந்து எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும்’ என்றார். விழாவில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி, கல்லூரி செயலாளர் என்.ஆர்.டி.பிரேம்குமார், இணை செயலாளர் பிரேம்சந்த், முதல்வர் இனிதா லீபனோன் எபன்சி, துணை முதல்வர் ஜாபியா சாலமோன், பன்னாட்டு அரிமா இயக்குனர் ஆர்.சம்பத், ஜெ.பிரவீன்குமார், கல்லூரி பேராசிரியர்கள்,  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: