ஆன்லைன் ரம்மி தடைக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை கண்டித்து சவப்பெட்டி ஊர்வலம்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ பங்கேற்பு

ஆலந்தூர்: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் தமிழக ஆளுநரை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பாக ஆளுநர் மளிகையை நோக்கி சவபெட்டியுடன் ஊர்வலமாக செல்லும் போராட்டம் சின்னமலை ராஜிவ் காந்தி சிலை அருகே நடந்தது. முன்னதாக மனித நேய மக்கள் கட்சியினர் சவப்பெட்டிகளை தூக்கிக்கொண்டு கோஷம்  எழுப்பியபடி மேடைக்கு வந்தனர் பினனர், நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அவர் பேசும்போது, ஆன்லைன் ரம்மி தடை சட்டம், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவு உள்ளிட்ட 21 சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டமுன்வடிவை 142 நாட்களுக்கு பின்னர் தமிழக அரசுக்கு திருப்பிய அனுப்பினார். இது தமிழக மக்களுக்கு எதிரான செயல். இதற்கு அவர் சொல்லும் காரணங்களை பார்க்கும் போது அவர் சட்ட மசோதாவை படித்து பார்த்தாரா, இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ரம்மி தடை சட்ட மசோவில் 3 பக்கங்களில், இந்த சட்டம் இயற்றப்படுவதற்கான பின்னனியை தமிழக அரசு தெளிவாக விவரித்து உள்ளது. ஆளுநர் எழுப்பியுள்ள கேள்விக்கு அந்த மசோதாவிலேயே விடை இருக்கிறது. இந்த சட்டமசோதா இயற்றுவதற்கு முன்பு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துருவின் அறிக்கையை பெற்று அதன் அடிப்படையிலேயே இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டுதான் இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கூடிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஆளுநர் தமிழக மக்களின் நலனுக்கு விரோதமான செயலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் 45 பேர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்துள்ளார்கள். தமிழக அரசு மீண்டும் சட்டமன்றத்தில் இந்த மசோதாவை இயற்றும் போது மனிதநேய மக்கள் கட்சி அதற்கு முழு ஆதரவு அளிக்கும். இந்த சட்டம் இயற்றிய பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுத்தால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அனுக வேண்டும்,’’ என்றார்.

Related Stories: