மல்டி லெவல் கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் விறுவிறுப்பாக நடைபெறும் எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மறுசீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர் ரயில் நிலையபயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சூழல், எதிர்காலத்துக்கு ஏற்ற உள்கட்டமைப்பு மற்றும் விமான நிலையத்தைஒத்த வசதிகள் ஆகியவற்றை வழங்குவதற்கான மறுசீரமைப்பு பணியை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம்மேற்கொண்டுள்ளது.

2022 அக்டோபரில் மறுசீரமைப்பு பணிக்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டது, தற்போது பணிகள் தொடங்கி சீரான வேகத்தில் நடைபெற்று வருகின்றன. காந்தி இர்வின் சாலை ஓரத்தில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கம் பார்சல் அலுவலகம் ஆகியவற்றிற்கான பிளேட் லோட் சோதனை முடிந்து. திட்ட மேலாண்மை தள அலுவலகத்தின் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. பேட்சிங் ஆலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. பல்வேறு கட்டிடங்களை இடிக்கவிருப்பதால், அதற்கு வசதியாக தடுப்புகள் அமைத்தல், அங்கிருக்கும் வசதிகளை அகற்றுதல், இடமாற்றம் செய்தல் ஆகிய செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

புவி தொழில்நுட்ப ஆய்வுக்காக ஆழ்துளை கிணறு தோண்டும் பணி நடக்கின்றன டெலிகாம் எக்ஸ்சேஞ்சின் மாற்றம் இடமாற்றம் ஆகியவற்றுக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. காந்தி இர்வின் சாலை பக்கத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங், பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங், பார்சல் அலுவலகம், தேனாம்பேட்டையில் குடியிருப்பு பகுதி, வருகை நடைமேம்பாலம், பார்சல் நடைமேம்பாலம், வருகை கூட்டம், பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்க நிலைய கட்டிடம், காந்தி இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் துணை நிலையம் ஆகிய கட்டுமானங்களுக்காக ஒப்பந்தம் வழங்கப்பட்டுவிட்டது.

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியானது, ஹைதராபாத்தை சேர்ந்த  டிஇசி இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ப்ராஜெக்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கு ரூ.7491 கோடி செலவில் ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்டது, திட்டத்தை முடிக்க 36 மாத காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது. அதே நேரம் ரூ.14.56 கோடி செலவில் திட்ட மேலாண்மை சேவைகளை  நிறைவேற்ற டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் லிமிடெட், மும்பைஎன்கிற நிறுவனம் பணியமர்த்தப்பட்டுள்ளது. காந்தி இர்வின் சாலை ஓரத்திலும், பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்திலும் இரண்டு முனையங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இருபுறமும் உள்ள டெர்மினல் கட்டிடங்கள், காத்திருப்பு பகுதி, டிக்கெட் வழங்கும் பகுதி, வணிகப் பகுதி மற்றும் ரூஃப் பிளாசா போன்ற உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் 3 தளங்கள் கொண்ட கட்டமைப்பாக முன்மொழியப்பட்டுள்ளன. புறப்படும் பயணிகள் மற்றும் வருகை புரியும் பயணிகள் ஆகியோரை பிரித்தல், பார்சல், போதுமான லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் ஆகியன இந்த கட்டிடத்தில் திட்டமிடப்பட்டுள்ளன காந்தி இர்வின் சாலை பக்கத்திலும் பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்திலும் முன்மொழியப்பட்ட மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டிடமானது, வணிகப் பகுதி, கார் மற்றும் பைக் பார்க்கிங் மற்றும் பட்ஜெட் ஹோட்டலுடன் கூடிய 5 தளங்கள் கொண்ட கட்டமைப்பாக முன்மொழியப்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் முன்மொழியப்பட்ட பார்சல் அலுவலகமானது பார்சல் அலுவலகம் 2 தளங்கள் கொண்ட கட்டமைப்பாக முன்மொழியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: