அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஜெ.சி.டி.பிரபாகர், வைத்திலிங்கம் வழக்கு: எடப்பாடி பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இந்த 3 வழக்குகளும் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். மனோஜ் பாண்டியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சலீம் ஆஜராகி, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம்  இன்னும் அங்கீகரிக்காத நிலையில், இடைக்கால பொதுச்செயலாளர் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.  

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிடும்போது, மனோஜ் பாண்டியன் வழக்கில், ஜூலை 11 தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கில், தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்றார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, வைத்திலிங்கம், பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளிக்கவும், எடப்பாடி பழனிசாமி பதில் மனுவுக்கு மனோஜ் பாண்டியன் தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: