மாஜி அமைச்சருக்கு மஞ்சள் அட்டை காட்டி கட்சியில் இருந்து எஸ்கேப் ஆன இலை நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மதுவை ஒழிக்க வேண்டும் என்று கட்சி தலைமைகள் அறிக்கை மேல் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்க… அந்த கட்சியை சேர்ந்தவர்களே பார், கள்ளச்சாரயம் விற்பனை என வசூலில் தட்டி எடுக்கிறாங்களாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மதுவை  ஒழிப்பதுதான் மாம்பழ கட்சியின் ஒரே இலக்கு என்று தலைவர்கள் மாதத்துக்கு பல அறிக்கைகளை விடுத்துக் கொண்டு இருக்காங்க. இதேபோல் மதுக்கடைகளை  திறக்கக் கூடாது என்று இலைகட்சியும் கொடி பிடித்துக் கொண்டிருக்கிறது.  ஆனால் ஊரடங்கு நேரத்தில் பல கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி  விற்பவர்கள், இந்த இரு கட்சிகளின் அனுதாபிகளாகவே இருந்ததாக போலீஸ் ரெக்கார்டில் பதிவாகி இருக்காம். இதில்  மாங்கனி சரகத்தில் பிடிபட்ட பலர், உள்ளூர் போலீசாரின் துணையோடு வெளியே  வந்திருக்காங்களாம். சமீபத்தில் மாங்கனி மாவட்டத்தில் இலைகட்சி பிரமுகர்  ஒருவர், கள்ளச்சாராயம் காய்ச்சிய நிலையில் போலீசாரால் கைது  செய்யப்பட்டாராம். விசாரணையின் போது ஓட்டம் பிடித்தவரை ஆந்திராவில் வைத்து  அமுக்கி பிடிச்சாங்க. இதேபோல் பல மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களை ஏலம்  எடுக்கவும் மாம்பழ நிர்வாகிகளும், இலைகட்சி நிர்வாகிகளும் முட்டி  மோதுறாங்களாம். இதில் மாம்பழ கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், பார்களை  ஏலம் எடுக்க தனது அடிப்பொடிகளை ஏவிவிட்டுள்ளாராம்… உண்மையான மதுவிலக்கு பிரச்சாரம் அந்தெந்த கட்சி தொண்டர்களிடம் இருந்தே தொடங்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பதவியில் பசை போட்டு ஒட்டிக் கொண்டுள்ள குமரி நிர்வாகிகளுக்கு அந்த மாவட்டத்தில் அப்படி என்னதான் வைத்து கொண்டிருக்கிறார்கள்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ குமரி மாவட்டத்தில் 55 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் சில பேரூராட்சிகளில் இளநிலை உதவியாளர்கள் மற்றும் வரி தண்டலர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ளார்களாம். சில பேரூராட்சிகளில் 7 வருடம், 8 வருடம் என தொடர்ந்து பணியில் இருப்பவர்களும் உள்ளார்கள். ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடாது என்ற விதிமுறை. இருந்தும் இவர்கள் 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுவதால் பல்வேறு புகார்களில் சிக்கி உள்ளனர். கடந்த இலை ஆட்சியின் போது இவர்களில் சிலரை மாற்ற சென்னையில் இருந்து ஆணை வந்துள்ளது. ஆனால் சென்னைக்கே சென்று பார்க்க வேண்டியவர்களை பார்த்து… கொடுக்க வேண்டியதை கொடுத்து அதே இடத்தில் அதே பதவியில் பசைபோல் உட்கார்ந்து கொண்டனர்.  ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதால், பணியாளர்கள் விரோத போக்கை கடைபிடிப்பதுடன், பிளான் அப்ரூவல், வரி நிர்ணயம் என பல்வேறு வழிகளில் லட்சங்களை குவித்து வருகிறார்களாம்… இதுக்கு யார் முடிவு கட்டுவது என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புலம்பி வர்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மஞ்சள் நிற அட்டை காட்டி எச்சரிக்கும் இலை நிர்வாகிகளும்; டீ கூட கொடுக்க மறுத்து அவமானப்படுத்திய மாஜி அமைச்சரைப் பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மேற்கு  மண்டல அதிமுகவில், சீனியராகவும், பவர்புல் நபராகவும் கருதப்பட்ட மாஜி  அமைச்சரிடம் இருந்து, அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் படிப்படியாக விலகத்  துவங்கி உள்ளனர். தொண்டர்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஆளுமையாக இருந்த  அந்த நபர், கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தும், கட்சி தொண்டர்களை  மதிக்காமல் வைட்டமின் இருந்தால் மட்டும் வா… இல்லையெனில் விலகு… என்ற  ரீதியில் செயல்பட்டு வந்துள்ளார். அதனால், அதிருப்தியில் இருந்த  தொண்டர்கள், தற்போது விலக துவங்கியுள்ளனர்.  ஒரு காலக்கட்டத்தில், அந்த  நபரின் வீட்டிற்கு தொண்டர்கள் சென்றால், டீ, டிபன், சாப்பிடாமல் அனுப்பி  வைக்கமாட்டார். ஆனால், தற்போது வீட்டில் இருந்தாலும், இல்லை என கூறிவிடு  என உதவியாளரிடம் சொல்கிறார். அது அப்படியே வெளியே காத்திருக்கும் இலை கட்சி தொண்டர்கள் காதில் விழுகிறதாம். இதனால் கடுப்பாகி மாஜிக்கு மிகவும்  நெருக்கமாக இருந்த இலையின் வர்த்தக அணி நிர்வாகி, மாவட்ட ஊராட்சி குழு  தலைவர், கவுன்சிலர்கள், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி உள்பட 100 பேர்  அக்கட்சியில் இருந்து விலகி, ஆளுங்கட்சியில் இணைந்து விட்டாங்களாம். பிரிந்து சென்ற  அனைவரும் மாஜி அமைச்சருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். இவர்களைகூட  தக்கவைக்க முடியவில்லையே என கட்சி மேலிடம் மாஜி அமைச்சர் மீது அதிருப்தியில் உள்ளது.  அடுத்தக்கட்டமாக, சோப்பு நுரை புகழ் நபருக்கு எதிராக உள்ளவர்களும்  அக்கட்சியில் இருந்து விலக ஆயத்தமாகி வருகின்றனர். இதன்மூலம், மஞ்சள்  மாவட்டத்தில் அதிமுக கூடாரம் விரைவில் காலியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது… கால் பந்தில் தப்பாக ஆடினால் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிப்பார் நடுவர்… இலை கட்சியில் விரக்தியில் இருக்கும் தொண்டர்களே நடுவர்களாக இருப்பதால்… மாஜி அமைச்சருக்கு மஞ்சள் கார்டு காட்டி கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர் என்று சொல்லி சிரிக்கின்றனர் சக இலை கட்சியினர்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post மாஜி அமைச்சருக்கு மஞ்சள் அட்டை காட்டி கட்சியில் இருந்து எஸ்கேப் ஆன இலை நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: