தேர்தலுக்கு மட்டுமே வெளியே வருவது அதிமுகவின் செயல்பாடு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பெரம்பூர்: புளியந்தோப்பில் நேற்று மாலை தமிழ்நாடு முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், தேர்தலுக்கு மட்டும் வெளியே வருவது அதிமுகவினரின் செயல்பாடு என தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பில் நேற்று மாலை ஒரு தனியார் தொழிற்கல்வி வளாகத்தில் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் லயன் உதயசங்கர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, 2000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசை கடனில் வைத்துவிட்டு சென்றனர். நமது முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடனே, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்கினார். இதன்மூலம் ஏராளமான பெண்கள் பயன்பெற்றனர். ஒரு திட்டத்தை எப்படி முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதை, நாம் பெண்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நான் அமைச்சராக செல்லும்போது, என்னுடைய முதல் பணி  பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்வதுதான். இந்த ஆய்வில், நான் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தும் வாய்ப்பு கிடைக்கிறது. இதை முழுமையாக பயன்படுத்தி கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதிலும் விரைவில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும். கருணாநிதி வழியில், முதல்வர் ஸ்டாலினும் கண்டிப்பாக சொன்னதை செய்வார். மகளிருக்கான ₹1000 உதவித்தொகை தொடர்பாக விரைவில் முதல்வரிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும். தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே அதிமுகவினர் மக்களை சந்திக்கின்றனர். ஆனால், நாங்கள் மக்களோடு மக்களாக இருந்து, எப்போதும் அவர்களுக்காக பணியாற்றி வருகிறோம்.

முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுகவினர் வெளியே வந்தனர். இனி, இன்னும் 9 மாதங்கள் கழித்துதான் வெளியே வருவர். இது அதிமுகவினரின் செயல்பாடு. பட்டாசு வெடிப்பது, பூங்கொத்து கொடுப்பது, பொன்னாடை போர்த்துவது, வரவேற்பு பேனர் வைப்பதை திமுகவினர் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக இளைஞரணிக்கு நன்கொடை வழங்குங்கள். மகளிர் சுயஉதவி குழுவினர் தயாரிக்கும் பொருட்களை பரிசாக தாருங்கள். இதனால் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். தற்போது வெளியாகும் ஆய்வுகளின்படி, வளர்ந்து வரும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கி உள்ளது. இதற்கு நமது முதல்வரின் அயராது உழைப்புதான் காரணம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். இதில் எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், பரந்தாமன், ஜோசப் சாமுவேல், முன்னாள் எம்எல்ஏக்கள் ப.ரங்கநாதன், கே.எஸ்.ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: