ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.82.98 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியீடு

சென்னை: ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நான்கு சிப்பங்களாக ரூ.82.98 கோடி மதிப்பீட்டில்  36.36 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்ட அரசாணையில்: தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சங்கரப்பேரி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தூத்துக்குடி ரூரல் மற்றும் முத்தையாபுரம்  போன்ற பகுதிகள் கடந்த 2015ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் மழைநீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளாகியது.

மேற்படி சூழ்நிலையில். இனி வருங்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் மழைநீர் வடிகால் அமைத்து, மழை வெள்ளத்தினை தவிர்க்க, திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியானது நான்கு தொகுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் முதல்கட்ட பணியானது தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம் மற்றும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.230.90 கோடி மதிப்பீட்டில் 22.68 கி.மீ நீளத்திற்கும், இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட பணிகள் நகர திட்டத்தின் கீழ் ரூ.122.86 கோடி மதிப்பீட்டில் 63.89 நீளத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது.

இம்மாநகராட்சியில் 2022-2023ம் ஆண்டிற்கான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.49 கோடி மதிப்பீட்டில் 47.063 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொகுதி 4ல் முதற்கட்டமாக நான்கு சிப்பங்களாக ரூ.82.98 கோடி மதிப்பீட்டில் 36.36 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இப்பணிகளை மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகளை மழைக்காலத்திற்குள் விரைந்து நிறைவேற்றி, வரும் மழைக்காலங்களில் மழை வெள்ள நீரினால் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு தவிர்க்கும் பொருட்டு சீரிய  முயற்சிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: