மெரினா கடற்கரையில் அதிநவீன கருவிகளுடன் சுற்றிய ரஷ்ய வாலிபர்: உளவாளியா என போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நேற்று காலை தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர், கையில் உலோகங்கள் கண்டுபிடிக்கும் அதிநவீன கருவிகளுடன் மணல் பரப்பில் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதை பார்த்த தூய்மை பணியாளர்கள் அவரிடம் சென்று என்ன என்று கேட்டதற்கு அவர் பதில் கூறாமல் இருந்துள்ளார்.  இதை கவனித்த மெரினா பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெளிநாட்டு வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த வாலிபர், ரஷ்யா நாட்டை சேர்ந்த ஹன்ரே என்றும், சென்னை ஓஎம்ஆர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

உடனே போலீசார் அவரிடம் சோதனை செய்த போது, அவர் பையில் கருவி மூலம் கண்டுபிடித்த நாணயங்கள், உலோகங்கள் சில இருந்தன. இருந்தாலும், அவர் ராணுவ வீரர் போல் இருந்ததால், ரஷ்ய உளவாளியாக இருக்கலாம் என சந்தேகத்தின்படி போலீசார் அவரை தங்களது காரில் ஏற்றி சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் வைத்திருந்த அதிநவீன கருவிகள் குறித்தும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர போலீசாரிடம் சிக்கிய நபர் குறித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய துணை தூதரக அதிகாரிகளிடம் தகவல் அளித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரையில் ரஷ்ய வாலிபர் அதிநவீன கருவிகளுடன் ஆய்வு செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: