மாமல்லபுரம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிகளில் சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் பேரூராட்சிக்கு சொத்துவரி செலுத்துவது வழக்கம். அதேபோன்று தொழில் செய்பவர்கள் பேரூராட்சிக்கு தொழில்வரி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், மாமல்புரம் பாடசாலை தெரு, கிழக்கு ராஜவீதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் 11 கடைகள் இயங்கி வந்தது. மேலும், மேற்கண்ட கடைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தப்படவில்லை. இந்த, சொத்துவரியை செலுத்தும்படி மாதம் 2 முறை நேரில் சென்றும், பலமுறை கடிதம் மூலமும் பேரூராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், சொத்து வரி செலுத்தப்படவில்லை. தற்போதுவரை சொத்துவரி ரூ.2 லட்சம் பாக்கி வைத்துள்ளனர்.

இதனையடுத்து, நேற்று பேரூராட்சி அதிகாரிகள் 10 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத 11 கடைகளில் ஒரு கடைக்கு முதலில் சீல் வைத்தனர். தொடர்ந்து, அடுத்தடுத்த கடைக்கு சீல் வைக்க முயன்றபோது, தனியார் அறக்கட்டளையினர் இன்னும் சில தினங்களில் வரிபாக்கியை செலுத்தி விடுவதாகக் கூறினர். உரிய சொத்துவரி செலுத்தியபின்பு சீல் அகற்றப்படும் எனக் கூறி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள தாமரைக்குளம் தெருவில் தனியாருக்கு சொந்தமான 11 கடைகள் உள்ளன.

இந்த கடைகளின் உரிமையாளர் பேரூராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்து வரி தொகையினை கடந்த 3 ஆண்டுகளாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பலமுறை அந்த கடைகளின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நேற்று அந்த 11 கடைகளுக்கும் பேரூராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

Related Stories: