பட்டாசு குடோனில் வெடி விபத்து பெண்கள் 2 பேர் உடல் சிதறி பலி

தர்மபுரி: தர்மபுரி அருகே, பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில், 2 பெண்கள் உடல் சிதறி பலியாகினர்.  தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே நாகதாசம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன்(32). இவர், அதே பகுதியில் பட்டாசு குடோன் வைத்துள்ளார். அதில்  ஒரு பகுதியில் பட்டாசு உற்பத்தியும் செய்து வருகிறார். அவரது உறவினர்களான சேலம் மாவட்டம், மேச்சேரி அடுத்த வெள்ளாறு பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள்(50), நாகதாசம்பட்டியைச் சேர்ந்த முனியம்மாள்(65), சிவலிங்கம்(52), சின்னபொண்ணு (65) ஆகியோர், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை பழனியம்மாள், முனியம்மாள் ஆகியோர் குடோனின் உள்பகுதியிலும், சிவலிங்கம் மற்றும் சின்னபொண்ணு ஆகியோர்  வெளியிலும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை 10.30 மணியளவில், குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து குடோன் முழுவதும் சிதறி தரைமட்டமானது. இதில், முனியம்மாள் சம்பவ இடத்திலேயும் பழனியம்மாள் 100 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டும் உயிரிழந்தனர். வெளியில் இருந்த சிவலிங்கம் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து உரிமையாளர் சரவணனை தேடி வருகின்றனர்.

* தலா ரூ.3 லட்சம்  நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு விபத்தில் பலியான முனியம்மாள் மற்றும் பழனியம்மாள்  குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிவலிங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: