அமமுகவினரை இபிஎஸ் இழுத்த நிலையில் டிடிவியுடன் இணைய தயார் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

அவனியாபுரம்: அமமுகவினரை எடப்பாடி பழனிசாமி இழுத்து வரும் நிலையில், மதுரையில் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், வாய்ப்பு அமைந்தால் டிடிவியுடன் இணைந்து செயல்படுவேன் என தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு அதிமுக எடப்பாடி அணியில் பாஜ மற்றும் அமமுகவினர் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுகவை முழுமையாக கைப்பற்றும் வகையில் அமமுகவினரை இழுக்கும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்து வியூகம் வகுத்துள்ளார். இதுதெரிந்து அமமுகவினர், ஓபிஎஸ் அணியினருடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நேற்று தேனியில் அமமுக, ஓபிஎஸ் அணியினர் ஒரு போராட்டத்தில் சேர்ந்து கலந்துகொண்டனர்.  

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: டிடிவி.தினகரனுடன் இணையும் வாய்ப்பு அமைந்தால் உறுதியாக இணைந்து செயல்படுவேன். விரைவில் சசிகலாவை சந்திப்பேன். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை சட்ட நியதிக்கு புறம்பாக உள்ளது என அனைவருக்கும் தெரியும். நாங்கள் உச்ச நீதிமன்ற வழக்கைப் பற்றி கவலைப்படவில்லை. மக்கள் தீர்ப்பை மட்டுமே எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மனித வெடிகுண்டாக மாறுவோம் என அச்சுறுத்தும் விதமாக பேசுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், ‘அவர்கள் புத்தி இல்லாதவர்கள்’ என்பது போல சைகை காண்பித்தார்.

Related Stories: