மாவட்ட தலைமை நீக்கியது ; மாநில தலைமை சேர்த்தது எடப்பாடி உருவப்படத்தை எரித்த பாஜ நிர்வாகியை நீக்குவதில் மோதல்: அதிமுகவினர் கொந்தளிப்பு

சென்னை: கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ நிர்வாகி மாவட்ட தலைமையால் பொறுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீண்டும் அதே பொறுப்பு வழங்கி மாநில பொதுச் செயலாளர் உத்தரவிட்டார். இதனால் அதிமுகவினர் அதிருப்தியடைந்துள்ளனர். பாஜ தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவராக இருந்த நிர்மல்குமார், மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குறித்து குற்றம்சாட்டி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து, பாஜ நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்தனர். இதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியின் படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அதிமுக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தினேஷ் ரோடியை, கட்சி பொறுப்பிலிருந்து 6 மாதம் விலக்கி வைப்பதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அறிவித்தார். இதையடுத்து அந்த அறிவிப்பை ரத்து செய்து மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி நேற்று அதிகாலை 1.30 மணிக்கு உத்தரவிட்டுள்ளார். இரவு 9 மணிக்கு பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்பட்டது, கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இனியும் பாஜ கூட்டணி தேவை தானா? என அதிமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடவடிக்கை எடுப்பாங்கனு நம்புகிறோம்: கே.பி.முனுசாமி

ஓசூரில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை பாஜகவினர் எரித்ததற்கு ஏற்கனவே நாங்கள் எங்களுடைய வருத்தத்தையும், ஆதங்கத்தையும் தெரிவித்தோம். அவரது உருவ பொம்மையை எரித்த பாஜவினர் மீது, கூட்டணி கட்சித் தலைவர்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்’ என்றார்.

Related Stories: