திட்டமிட்டபடி நாளை முதல் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும்: அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: திட்டமிட்டபடி நாளை முதல் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன் பாடு ஏற்படாத நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆவினுக்கு நாளை முதல் பால் வழங்கப்போவதில்லை என உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி நாளை முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் அறிவித்திருந்தார். மாடுகளின் தீவன செலவு, பராமரிப்பு செலவு அதிகரித்து இருப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

கறவை மாடுகளுக்கு ஆவின் நிறுவனம் சார்பில் இலவச காப்பீடு வசதி செய்து கொடுக்க வேண்டும். கிராம சங்க பால் கொள்முதலில் ஐ.எஸ்.ஐ. பார்முலாவை அமல்படுத்த வேண்டும். கால்நடை தீவனத்துக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்ட பாலின் தரம், அளவு அடிப்படையில் ஒப்புகை சீட்டு வழங்கி பாலுக்கான பணம் பட்டுவாடாவை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் நாளை முதல் போராட்டம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், பால் உற்பத்தியாளர் சங்கங்களுடன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, திட்டமிட்டபடி நாளை முதல் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Related Stories: