கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான முகமது அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான முகமது அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என புழல் சிறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கில் கைதான முகமது அசாருதீன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முகமது அசாருதீனை காவலுக்கு எடுத்த என்ஐஏ அதிகாரிகள் விசாரணையின்போது துன்புறுத்தியதாகவும், அதனால் காயமடைந்துள்ள அவருக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அசாருதீனின் தந்தை முகமது யூசுப் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.    

அந்த மனுவில் அசாருதீனை தலைகீழாக தொங்கவிட்டு என்ஐஏ அதிகாரிகள் தாக்கியதாகவும் அதனால் அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் அசாருதீனின் தந்தை மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு புழல் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அசாருதீனின் தந்தை தாக்கல் செய்த மனுவிற்கு ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும் என என்ஐஏ அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு, இந்த விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: