1.50 லட்சம் குடும்பங்கள் காக்கப்பட்டுள்ளன : இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து முதல்வர் நெகிழ்ச்சி

சென்னை : இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 1.50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேர அவசர சிகிச்சை செலவை அரசே ஏற்கும். முதற்கட்டமாக தமிழகத்தில் 609 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் விபத்தில் பாதிக்கப்பட்டவரை  மருத்துவமனையில் அனுமதிக்கும் நபருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். விபத்தில் சிக்கியவர்கள் பிற நாடு, பிற மாநிலத்தைச் சேர்ந்தாலும் இந்தத் திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படும். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாதவரும் பயன்பெறலாம்.

இந்த நிலடியில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 1.50 லட்சம் குடும்பங்கள் காக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48 திட்டத்தில் பனிமலர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 1,50,000 வது பயனாளியை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சொன்னதைச் செய்வது மட்டுமல்ல; சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம்!

தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் Golden Hours காலக்கட்டத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென்பதற்காக கடந்த 18-12-2021 அன்று இன்னுயிர் காப்போம் திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் தொடங்கி வைத்தேன்.

இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் உருவான இந்தத் திட்டம், ஒரு முன்மாதிரி திட்டம்! இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-ஆவது பேராகப் பனிமலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயனடைந்திருக்கிறார். ஒன்றரை இலட்சம் பேர் அல்ல; அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்டுள்ளன என்ற நெகிழ்வோடு இதனைப் பகிர்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: