சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ. 1.64 கோடியில் 5 பாலங்களை அழகுபடுத்தும் பணிகள் நிறைவு: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் 14 மேம்பாலங்கள் மற்றும் 12 ரயில்வே மேம்பாலங்கள் என 26 முக்கிய பாலங்கள், 16 வாகன சுரங்கப்பாதைகள், 5 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள், 4 நடைமேம்பாலங்கள் மற்றும் 234 சிறுபாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது, ‘‘சென்னை மாநகரை அழகுப்படுத்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியில் மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் வண்ண விளக்குகள் அமைத்து, பசுமையாக்கி அழகுபடுத்தும் பணி செயல்படுத்தப்படும்’’ என அறிவித்தார்.

அதன் அடிப்படையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மேம்பாலங்களின் கீழ்ப்பகுதிகளை அழகுபடுத்தும் வகையில் கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைதல், பசுமைப் பரப்பை அதிகரிக்க மரம், செடிகள் நடுதல், வண்ண விளக்குகள் மற்றும் செயற்கை நீரூற்று அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. இவற்றில், முதற்கட்டமாக கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127 கோயம்பேடு மேம்பாலத்தில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டிலும், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-146 மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலும், ஆலந்தூர் மண்டலம், வார்டு-162 மற்றும் 165 ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் முதல் தில்லை கங்கா நகர் வரை ரூ.13 லட்சம் மதிப்பீட்டிலும், அடையாறு மண்டலம், வார்டு-176 மற்றும் 178 வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் முதல் புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் வரை ரூ.45 லட்சம் மதிப்பீட்டிலும், பெருங்குடி மண்டலம், வார்டு-169 புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் முதல் ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் வரை ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் 5 மேம்பாலங்களின் கீழ்ப்பகுதிகளில் அழகுபடுத்தும் பணிகள் முடிந்துள்ளன.

மேலும், ராயபுரம் மண்டலம், வார்டு-61 பாந்தியன் சாலை மற்றும் காசா மேஜர் சாலை சந்திப்பு மேம்பாலத்தில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டிலும், அடையாறு மண்டலம், வார்டு-171 மற்றும் 172 சர்தார் பட்டேல் சாலை மற்றும் காந்தி மண்டபம் சாலை சந்திப்பு மேம்பாலத்தில் ரூ.2.18 கோடி மதிப்பீட்டிலும், அடையாறு மண்டலம், வார்டு-177 சக்கரபாணி தெரு மேம்பாலத்தில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டிலும், பெருங்குடி மண்டலம், வார்டு-188 காமாட்சி மருத்துவமனை மேம்பாலத்தில் ரூ.2.55 கோடி மதிப்பீட்டிலும், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-110 மற்றும் 113 வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலை சந்திப்பு மேம்பாலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மற்றும் வார்டு-117 ஜி.என்.செட்டி சாலை கலைவாணர் பாலத்தின் கீழ்ப்பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.10.01 கோடி மதிப்பீட்டில் 6 மேம்பாலங்களில் அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: