பெண்ணையாறு தீர்ப்பாய விவகாரம் கர்நாடகா மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: உச்ச நீதிமன்ற கெடு முடிந்தும் அமைக்காதது பெண்ணையாறு தீர்ப்பாயத்தை பெரும் அநீதி, இனியும் தாமதிக்காமல் அமைத்திட் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையிலான தென்பெண்ணையாறு ஆற்றுநீர்ச் சிக்கலை தீர்ப்பதற்காக, மார்ச் 14ம் தேதிக்குள் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. தேர்தலைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு ஆதரவாக ஒன்றிய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில், தென்பெண்ணையாறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை வளப்படுத்தி விட்டு கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. தென்பெண்ணையாற்றின் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்குவதில் கர்நாடகம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. இதைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தென்பெண்ணையாறு சிக்கலுக்கு தீர்வு காண 3 மாதங்களில் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று டிசம்பர் 14ம் தேதி ஆணையிட்டது. அதன்படி நேற்றைக்குள் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதன் கடமையை இதுவரை நிறைவேற்றவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத ஒன்றிய அரசு, நடுவர் மன்றம் குறித்து முடிவெடுக்கவில்லை. தென்பெண்ணையாறு நடுவர் மன்றத்தை அமைத்தால், அது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தான் நடுவர் மன்றம் அமைப்பதை ஒன்றிய அரசு தாமதமாக்குகிறது. தென்பெண்ணையாற்று சிக்கலுக்கு தீர்வு காண இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடுவர் மன்றத்தை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும். அவ்வாறு அடுத்த சில நாட்களுக்கும் நடுவர் மன்றம் அமைக்க தவறினால், உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடருவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: