கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மழைநீர் வடிகால் பணி 75 சதவீதம் நிறைவு: விரைவில் முடிவடையும் என அதிகாரிகள் தகவல்

பெரம்பூர்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணிகள் முழுவதுமாக முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. மழைக்காலங்களில் சென்னை மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மொத்த மழைநீரும் 3 வழிகளில் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் மழை நீர் போதிய வடிகால் வசதி இல்லாததால் கடந்த காலங்களில் கொளத்தூர் தொகுதி மக்கள் மழைக்காலத்தில் அவதிப்பட்டு வந்தனர். இப்பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கியமான 60 தெருக்களில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காதபடி 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ. 120 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேற்பார்வையோடு மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகள் முழுவதும் கான்கிரீட் வடிவில் மேற்கொள்ளப்படுவதால் அதனுள், துளைபோட்டு கழிவுநீரை செலுத்த முடியாது. இரவு பகல் பாராது தொடர்ந்து சவாலான இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு வருகின்றன.  குறிப்பாக, பேப்பர் மில்ஸ் ரோடு, எஸ்ஆர்பி கோயில் தெற்கு மற்றும் வடக்கு பகுதி உள்ளிட்ட சவாலான இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது வண்ணாங்குட்டை, ஜவஹர் நகர், வெங்கட்ராமன் சாலை, பெரியார் நகர், ராம் நகர் உள்ளிட்ட 16 இடங்களில் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு அந்த நீர் முழுவதும் வெளியேறும் பல்லவன் சாலை பகுதியில் தற்போது முழுவீச்சில் பணிகள் நடந்து வருகின்றன.

கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் இருந்து வெளியேறும் மழைநீர் அனைத்தும் பல்லவன் சாலை வழியாக ஜவகர் கெனால் மூலம் கடலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த பல்லவன் சாலையில் மிகப்பெரிய அளவில் தற்போது பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் 1,100 மீட்டர் நீளமுள்ள இந்த பகுதியில் 4 மீட்டர் அகலத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு, தற்போது பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த பணிகளை வட்டார துணை ஆணையர் ஷேக்அப்துல் ரகுமான், திரு.வி.க. நகர் செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர் ரவிவர்மா, பாபு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். பல்லவன் சாலை பணிகள் முழுவதும் விரைவில் முடிக்கப்பட்டு மழை நீர் அனைத்தும் ஜவஹர் கெனால் வழியாக வெளியேறும் வசதி செய்து தரப்படும் எனவும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் முழுவதுமாக முடிவடையும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: