சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பொறியியல் படிப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் சீதாராம் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் நிதி உதவி அமைக்கப்பட்டுள்ள ஐடியா லேப்-ஐ அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு தலைவர் சீதாராம் நேற்று முந்தினம் திறந்துவைத்து, அங்குள்ள மாணவர்கள் மேற்கொள்ளும் புதிய கண்டுபிடிபுகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் நிறுவனர் ஸ்ரீராம் உள்ளிட்ட பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு தலைவர் சீதாராம், நாடு முழுவதும் புறநகர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சார்பில் ஐடியா லேப் நிறுவப்பட உள்ளது. சுமார் 93 கல்வி நிறுவனங்களில் இதனை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளை தாய் மொழியில் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பொறியியல் படிப்புகள் தாய்மொழியில்தான் வழங்கப்படுகிறது. தாய் மொழியில் படிப்பதன் மூலம் மாணவர்கள் சிந்தனை திறன் மேம்பட்டு அவை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏதுவாக இருக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பொறியியல் படிப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொறியியல் மாணவர்களின் திறனை பொறுத்து வேலைவாய்ப்பு உள்ளது. திறன் வாய்ந்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.