தமிழ்நாடு அரசின் அங்கக வேளாண்மைக் கொள்கை 2023ஐ மனதார வரவேற்கிறேன்: துரை வைகோ அறிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசின் அங்கக வேளாண்மைக் கொள்கை 2023ஐ மனதார வரவேற்கிறேன் என துரை வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, மண்வளம் பாதிக்கப்படுகிறது. இந்த ரசாயன உரங்களில் கலந்து இருக்கும் நச்சு வேதிப் பொருட்கள் நம் உடலில் நோய்கள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றன.இன்றைய சூழலில், உணவுப் பழக்க வழக்கங்களால் சிறுவர்களுக்குக்கூட இதய நோய்கள், ஒவ்வாமை, தோல் நோய்கள், புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சிறுநீரகங்கள் தொற்றுகளுக்கு ஆளாகி பாதிப்படைகின்றன. இந்த அழிவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்க இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் முறை அவசியமாகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக, பல்வேறு விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அங்கக வேளாண்மைக்  கொள்கை 2023 உருவாக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையின் படி, நச்சுத் தன்மை வாய்ந்த இரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலம், நீரையும், மண்ணையும் பாதுகாக்க வழிவகுக்கும்.

மேலும், அங்கக சான்றளிப்பு முறைகளில் எளிமை, பண்ணைக்கு அருகிலேயே உற்பத்தி செய்யக் கூடிய தொழு உரம், மண்புழு உரம் போன்ற இடு பொருள்களை ஊக்குவித்தல், சுற்றுச் சூழலுக்கு உகந்த உணவை வழங்குதல் ஆகியவற்றுக்கும் இக்கொள்கை வழிவகுக்கிறது. அனைத்து வகையான பாரம்பரிய நாட்டு விதைகளைப் பாதுகாக்க மாநில அளவில் மரபணு வங்கி உருவாக்கப்படும் என்பதையும் இக்கொள்கை உறுதிபடுத்துகிறது. தமிழ் மக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, இயற்கை வேளாண்மையை அறிமுகப் படுத்தும் தமிழ் நாடு அரசின் இக் கொள்கையை மனதார வரவேற்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: