அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

நெல்லை: வள்ளியூர் மற்றும் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் மற்றும் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப. கார்த்திகேயன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று (14.03.2023) நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை இ.பெரியசாமி பேசியதாவது; முதலமைச்சர், கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட செயல்பாடுகள் குறித்தும், முதலமைச்சரின் கிராமப்புற சாலை திட்டம் குறித்தும், 100 நாள் வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம், ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் குக்கிராமங்களில் உள்ள சாலைகள் 10 ஆயிரம் கீலோ மீட்டர் அளவிற்கு பிரதான சாலைகளுடன் இணைப்பதற்கு ரூ.4000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

அனைத்து கிராமங்களுக்கும் தரமான சுகாதாரமான குடிநீர் கிடைப்பதற்கும், மின்விளக்கு வசதி செய்து தருவதற்கும், வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கிடைத்திட அதுவும் அந்தந்த ஆண்டிலேயே கிடைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தொடக்கபள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் புதிதாக கட்டுவதற்கும் அதுவும் உயர்நிலை கல்லூரிகளில் இருக்கும் வசதிகளை விட மேலான வசதிகளை கொண்ட சுகாதாரமான, காற்றோட்டமான வகுப்பறைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரமான கழிப்பறை வசதிகள் செய்திடவும் இதுவரை இல்லாத புதிய வடிவமைப்பில் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து கிராமங்களில் அங்கன்வாடி மையம், நியாய விலை கடைகள் கட்டுவதற்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளுடன் இதுவரை ஆய்வு செய்யபட்ட பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பதவியேற்ற ஒன்றறை ஆண்டு காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசானையின்படி இம்மாவட்டத்திற்கு வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தி 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைகொண்டு வளர்ச்சி திட்டப்பணிகள் முழுமையாக மக்களுக்கு சென்று அடையும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குநர் சாந்தி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் அனிதா, செயற்பொறியாளர் முருகன், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சேவியர் செல்வராஜா, நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் சௌமியா ஆரோக்கிய எட்வின், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், மங்களம் (எ) கோமதி, கிஷோர் உட்பட அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Related Stories: