அரியலூர் பாதிரியாரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய விஎச்பி செயலாளர் கைது

அரியலூர்: அரியலூர் பாதிரியாரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய விஎச்பி மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர். அரியலூரில் தூயலூர்து அன்னை ஆலயத்தில் பாதிரியராக இருப்பவர் டோமினிக் சாவியோ. ஆர்சி பள்ளிகளின் தாளாளராகவும் இருந்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் அரியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரியலூரை சேர்ந்த வினோத் என்பவர் என்னை சந்தித்து, விஎச்பி அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல் (39) என்பவர் போனில் உங்களை பற்றி அவதூறாக பேசுகிறார். ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு உங்கள் மீது பாலியல் பலாத்காரம், வன்கொடுமை போன்ற குற்றச்சாட்டை சுமத்தி ரூ.25 லட்சம் கேட்டு மிரட்ட போவதாக தெரிவித்தார்.

மேலும், இதுபற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்ப உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, முத்துவேல் என்னை நேரில் சந்தித்து ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டினார். பணம் கொடுக்கவில்லை என்றால் என் மீது வதந்தியை பரப்பி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்துவேன் என்று தெரிவித்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக அரியலூர் போலீசார் வழக்கு பதிந்து, விஎச்பி மாவட்ட செயலாளர் முத்துவேலை நேற்று கைது செய்தனர். 

Related Stories: