சிறையில் உள்ள ஏபிவிபியுனருடன் சந்திப்பு குற்ற குறிப்பாணையை எதிர்த்து டாக்டர் சுப்பையா வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவி லாவண்யா மரணம் தொடர்பாக பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீட்டை கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டனர். அந்த வழக்கை கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவரான டாக்டர் சுப்பையா சிறைக்கு சென்று சந்தித்தார்.

டாக்டர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி, சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். இந்த  உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதேசமயம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை சார்பில் டாக்டர் சுப்பையாவுக்கு குற்ற குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி டாக்டர் சுப்பையா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: