ஆன்லைன் ரம்மியால் 4 பேர் மரணமடைந்த வழக்கு பதில் மனு தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு ஐகோர்ட் அவகாசம்

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால், சென்னை பெருங்குடியில் வசித்துவந்த லண்டனை சேர்ந்த தனியார் வங்கியின் ஊழியரான மணிகண்டன் என்பவர் தனது மனைவி தாரகபிரியா, 11 வயது மகன் தாரன், ஒன்றரை வயது தாகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ரகுவரனும் தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், மும்பையை சேர்ந்த கேம்ஸ் 24x7 என்கிற நிறுவனத்துக்கு விளையாட்டு தொடர்பான விவரங்கள், இறந்துபோனவர்களுக்கு விளையாட்டு மூலம் வழங்கப்பட்ட போனஸ், சம்பாதித்த தொகை, வருமான வரி பிடித்தம் தொடர்பான விவரங்களை வழங்கும் படி சிபிசிஐடி கடந்த மாதம் 24ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இந்த இரண்டு நோட்டீஸ்களை ரத்து செய்ய கோரி, கேம்ஸ் 24x7 நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்குமார், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஏராளமான ஆவணங்கள் உள்ளதால், விரிவான பதில்மனு தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று கோரினார்.  

அப்போது, பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்குவதில் ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அதுவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இதையடுத்து அரசு தரப்பு பதிலளிக்க மார்ச் 28ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, அதுவரை எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: