சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகிறோம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

சென்னை: மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கும் வகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகிறோம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் பதில் அளித்துள்ளார்.  அரசின் விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 20-ம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பாலாற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக சமூக ஆர்வலர் கஜராஜ் வழக்கு தொடர்ந்தார். மணல் அள்ளுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அடங்கிய அரசாணையை சமர்ப்பிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை வரலாறு காணாத வகையில் தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது. தமிழகத்தின் சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீர்வளத்தையும் பாதுகாப்பதற்கான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெருகி வரும் மணல் கொள்ளையை தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகிறோம் என்று தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த மணல் கொள்ளையால் பாலாறு சிதைக்கப்பட்டுக் கிடக்கும் நிலையில், மீண்டும் அங்கு மணல் எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். வட மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் பாலாற்றைக் கூறு போடுவதால், அடுத்த சந்ததியினர் குடிக்கக்கூட தண்ணீரைத் தேடி அலையும் அவலம் ஏற்படும்.

தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்வதால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து பாதிக்கப்படுவதோடு நீரின் தன்மையும் மாறி வருகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் மணல் கொள்ளை தடையின்றி தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் முக்கிய ஆறுகளில் நடந்த மணல் கொள்ளையால் ஆறுகள் தங்கள் அடையாளங்களை இழந் துவிட்டன. மேலும், அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளன. மணலுக்கு மாற்றாக எம்.சான்ட்டை பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், கட்டுமானத் துறைப் பொறியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஆறுகள், நீர்நிலைகள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளுக்கு ஆற்று மணல் பயன்படுத்துவதைத் தடை செய்து எம்.சாண்ட் பயன்படுத்த அரசு ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் மணல் கொள்ளை தொடர்ந்து ஆறுகள் தங்கள் வழித்தடங்களில் இருந்து திசை மாறுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: