டெல்லி: வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்த ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் ராகுல் காந்தியின் வருகை சராசரியை விட குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி சமீபத்தில் லண்டனில் சுற்றுப்பயண்ம மேற்கொண்டார்.
அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய ஜனநாயக கட்டமைப்புகள் அனைத்தும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக தெரிவித்தார். தற்போதைய பாஜக ஆட்சியில் நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தும் முழு அளவிலான தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது மைக் அணைக்கப்படுகிறது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் பட்ஜெட் தொடரின் 2-வது அமர்வின் முதல் நாளான நேற்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலை கிளப்பிடது. ராகுல் காந்தியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாஜக-காங்கிரஸ் எம்.பி.க்கள் மோதலில் ஈடுபட்டதால் அவை முடங்கியது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியா இன்று சர்வதேச அளவில் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. மேலும் ஜி20 மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. ஆனால் ராகுல் காந்தி இந்தியா தொடர்ந்து அவமானப்படுத்துகிறார். அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாளுமன்றத்தில் தனக்கு பேச அனுமதி வழங்கப்படுவதில்லை என்று அவர் கூறுகிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் அவரது வருகைப்பதிவு சராசரியை விட குறைவாகவே உள்ளது. இவ்வாறு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.