கொளத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு-சிறுத்தை நடமாட்டம் என கிராம மக்கள் அச்சம்

மேட்டூர் : சேலம் மாவட்டம், கொளத்தூர் உள்ள தார்காடு கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள செம்மலை ஏரி அருகே, தனசேகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், குஞ்சப்பன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் 10 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம் போல் பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு, அருகில் உள்ள வீட்டில் படுக்க சென்றுவிட்டார். அதிகாலை வந்து பார்த்த போது, பட்டியில் இருந்த 10 வெள்ளாடுகள், கழுத்தில் கடிபட்ட காயத்துடன் இறந்து கிடந்தன. அதிர்ச்சியடைந்த குஞ்சப்பன், இதுகுறித்து அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களிடம் கிராம மக்கள் கூறுகையில், ‘ஆட்டு பட்டிக்குள் புகுந்த சிறுத்தை, 10 வெள்ளாடுகளை கழுத்தை கடித்து, ரத்தம் குடித்து சென்றுள்ளது. வனத்துறை அதிகாரிகள், வந்து சென்ற விலங்கின் காலடி தடங்களையும், ஆடுகளை கடித்த பல் பதிவுகளையும் கொண்டு, எந்த விலங்கு என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, இதே பகுதியில் விவசாயி ஒருவரின் 2 ஆடுகளையும், ஒரு மாதத்திற்கு முன்பு காட்டெருது ஒன்றையும் சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது,’ என்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் மிதுன் சக்ரவர்த்தி, ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சரவணகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். ஆடுகளை தாக்கும் விலங்கை கண்டறிய சிசிடிவி கேமரா வைக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினரை கேட்டுக்கொண்டனர். மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதால், மாலை மற்றும் இரவு நேரத்தில் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: