கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் பாஜ மதவாதத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறது: திருமாவளவன் பேச்சு

சென்னை: பாஜ அரசு மதவாதத்தை தூண்டும் விதமாக செயல்படுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கங்கள் மீது பாஜ நடத்தும் வெறியாட்டத்தை கண்டித்து அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் தங்க சாலை பேருந்து நிலையம் எதிரே நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, திக துணைத் தலைவர் கலி பூங்குன்றன், மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஆட்சியை செயல்படுத்தியது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜ அரசு மதவாதத்தை தூண்டும் விதமாக செயல்படுகிறது. இந்திய அரசு மதம் சார்ந்த அரசாக இருக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் நோக்கமாகும். இந்த தேசத்தின் பெயரை மாற்றுவது, தலைநகரை மாற்றுவது இதுதான் அவர்களின் கனவு திட்டமாக உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற அவர்கள் துடிக்கிறார்கள்.

2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று இதையெல்லாம் சாதிக்கலாம் என்று கனவு காண்கிறார்கள். இது ஒரு போதும் பலிக்காது. ஒன்றிய அரசு என்பது மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் அவர்கள் மாநில அரசுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். 2024ம் ஆண்டு தேர்தல் ஆபத்தான தேர்தல். எப்பேர்பட்டாவது காங்., கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எல்லா தோழமைக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாஜவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்றார்.

Related Stories: