பெருநகர் குடிநீர் வழங்கல்-கழிவு நீரகற்று வாரியத்துக்கு சென்னையில் ரூ.24.92 கோடியில் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்துக்கு, ரூ.24.92 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலக கட்டிடம் தரை மற்றும் 6 தளங்களை கொண்டது. இந்த கட்டிடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்து இருந்த நிலையில், புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.24 கோடியே 92 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இந்த பணிகள் நிறைவுற்றதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய புகார் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு ரூ.1 கோடியே 13 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேம்படுத்தப்பட்ட இந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், குடிநீர் வழங்கும் லாரிகளின் இயக்கம் மற்றும் கழிவு நீரகற்றும் ஜெட்ராடிங் இயந்திரங்களின் இயக்கங்கள் ஜிபிஎஸ் முறையில் கண்காணிக்கப்படும்.

சென்னை குடிநீர் வாரிய நிலநீர் புவியியல் துறை சார்பாக சென்னை பெருநகரில் உள்ள 200 வார்டுகளிலும் மின்னணு முறையில் சேகரிக்கப்படும். நிகழ்நிலை நிலத்தடி நீர் பதிவுகள் மற்றும் சென்னை பெருநகரில் பெறப்படும் மழையின் அளவை பகுதி அலுவலகங்கள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நிகழ்நிலை மழைமானிகள் இங்குள்ள எல்இடி திரையின் மூலமாக கண்காணிக்கப்படும். அதனை தொடர்ந்து, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் புதிதாக வடிவமைக்கப்பட்ட வலைதளத்தின் சேவையை (https://chennaimetrowater.tn.gov.in) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், செயல் இயக்குநர் ராஜகோபால் சுன்கரா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: