மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: இந்திய ரயில்வே சார்பில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது ஆண் பயணிகளுக்கு கட்டணத்தில் 40 சதவீதம் சலுகையும், குறைந்தபட்சம் 58 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சகாப்தி, துரந்தோ ரயில்களின் அனைத்து வகுப்புகளிலும் இந்த சலுகை வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி இந்த கட்டண சலுகை வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான  ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. பாஜ எம்பி ராதா மோகன் சிங் தலைமையிலான ரயில்வேக்கான நிலைக்குழு  தனது 14வது அறிக்கையில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்ற தனது பரிந்துரையை நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்பித்துள்ளது.

* வந்தே பாரத் ரயில் உற்பத்தியின் வேகம் குறித்து ரயில்வே நாடாளுமன்ற நிலைக்குழு தனது கவலையை அறிக்கையில் வெளிப்படுத்தி உள்ளது. 2022-23ம் ஆண்டிற்கு திட்டமிடப்பட்ட 35வந்தே பாரத் ரயில் ரேக்குகளில்  தற்போது வரை 8 மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது கவலையளிக்கிறது. இந்த வேகத்தில் உற்பத்தி செய்தால் ரயில்வே நிர்ணயித்த இலக்கை அடைவது கடினமாகும் என நிலைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related Stories: