4வது மாடியிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

பெரம்பூர்: பெரம்பூரில் கட்டிட வேலை செய்யும்போது 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா, நீலம் போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (26). இவர் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். பின்னர் பெரம்பூர் ராஜவேலு தெரு பகுதியில் நடைபெறும் கட்டிட வேலையில் கடந்த 2 மாதமாக தங்கி, அரவிந்த் மேஸ்திரி வேலை செய்து வந்தார். நேற்று மதியம் 12 மணியளவில் அந்த கட்டிடத்தில் வேலை செய்தபோது, சென்ட்ரிங் பலகைகளை கழற்றும்போது, கால்தவறி பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் அரவிந்த் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக சக ஊழியர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, அவர் வரும்வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: