மாதா சிலையின் பாதுகாப்பு கண்ணாடி கூண்டு உடைப்பு: திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மாதா சிலையில் பாதுகாப்பு கூண்டு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூண்டி பேருந்து நிலையத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு 6 அடி உயரம் கொண்ட பூண்டி மாதா சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை சுற்றி பாதுகாப்புக்கு கண்ணாடியிலான கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சென்று தினமும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலை பக்தர்கள் வந்தபோது மாதா சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு சுக்குநூறாக உடைக்கப்பட்டு கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியில் பக்தர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா மற்றும் போலீசார் விரைந்துவந்து ஆய்வு செய்தனர்.

அப்போது மாதா சிலைக்கு கீழே மது பாட்டில்கள் சிதறி கிடந்தன. எனவே, மது அருந்தியவர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு மாதா சிலையின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சிலையின் பாதுகாப்பு கருதி சிலையை சுற்றி கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது. தற்போது கண்ணாடி கூண்டும் உடைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘’சிலையின் கண்ணாடியை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: