சென்னை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் சமக தலைவராக எர்ணாவூர் நாராயணன் மீண்டும் தேர்வு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் நேற்று சமத்துவ மக்கள் கழகத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவராக மீண்டும் எர்ணாவூர் நாராயணன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். கோயம்பேட்டில் சென்னை டீலக்ஸ் ஓட்டலில் நேற்று சமத்துவ மக்கள் கழகத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர், பா.சிவந்தி ஆதித்தனார், பா.ராமச்சந்திர ஆதித்தனார் ஆகியோரின் திருவுருவப் படங்களை சமக தலைவர், பொது செயலாளர், இளைஞரணி செயலாளர் ஆகியோர் திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சிரியா, துருக்கி நாடுகளில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை சமக மகளிரணி நிர்வாகிகள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இக்கூட்டத்தில், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணனை, அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக கட்சித் தலைவராக மீண்டும் தேர்வு செய்தனர். இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளராக சூலூர் சந்திரசேகரன், பொருளாளர் கண்ணன், துணை தலைவர் நிப்பான் தனுஷ்கோடி, இளைஞரணி செயலாளராக பிரபு, மாணவரணி செயலாளராக கார்த்திக் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில், தமிழ்நாட்டில் அதிகளவு தற்கொலைகளை ஏற்படுத்தும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்காமல், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதற்கு சமக கண்டனம் தெரிவிக்கிறது.

மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு அனுமதி வழங்காத ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். அதேபோல் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான சௌந்தர பாண்டியனாரின் பிறந்த நாளை, தமிழ்நாடு முதல்வர் அரசு விழாவாக ஏற்று நடத்தப்பட வேண்டும். வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தலில் வெற்றிபெற பணியாற்றுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, துணை செயலாளர் விநாயகமூர்த்தி, காமராசு நாடார், கொள்கை பரப்பு செயலாளர் முனிஸ்வரன், தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், தகவல் தொழில்நுட்ப செயலாளர் விஸ்வநாதன், வர்த்தக அணி செயலாளர் சுப்பையா, இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை, இளைஞரணி துணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், பாலசேகர், மாணவரணி துணை செயலாளர் ராஜ்குமார், சோனை யாதவ், வர்த்தகர் அணி துணை செயலாளர் மங்கைராஜா, மாவட்ட செயலாளர்கள் வடசென்னை பாஸ்கர், வில்லியம்ஸ், மத்திய சென்னை அருண்குமார், ராஜலிங்கம், தென்சென்னை பாலசுப்பிரமணியம், துரைமாணிக்கம், மாவட்ட செயலாளர்கள் திருவள்ளூர் விஜயன், சுபாஷ், மதுரைவீரன், செங்கல்பட்டு பழனிமுருகன், காஞ்சிபுரம் ஸ்ரீ ராம்,  கோயில்தாஸ், ஜெயபால் செல்வம், தூத்துக்குடி அற்புதராஜ், கன்னியாகுமரி தங்கப்பன், செல்வம், காரைக்கால் விஜய், மகளிரணி நிர்வாகிகள் துணை செயலாளர் கல்பனா, மதுரை ஹெலன், வடசென்னை ஆனந்தி, காஞ்சிபுரம் லெசி உள்பட ஏராளமான மாநில, மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிரணி நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

Related Stories: