கடலூர் : அசைவ வகைகளில் மீன்களுக்கு என தனி சுவை உண்டு. இதனை சுவைப்பதற்கு அசைவ பிரியர்களின் எண்ணிக்கை ஏராளம். அதுவும் கடலூர் மாவட்டத்தில் கடல் சார்ந்த பகுதி என்பதால் மீன்கள் பிடிபட்டவுடன் விற்பனைக்கு வரும் நிலையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு ஏராளமாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற நிலையில் மீன்கள் வாங்குவதற்கு கடலூர் துறைமுகம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பிரதான மீன் மார்க்கெட் பகுதிகள் மற்றும் பல்வேறு மாநகரின் இடங்களில் உள்ள மார்க்கெட் மற்றும் சாலை கடைகளில் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இதற்கிடையே மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக மீன் வியாபாரிகளும், அதனை வாங்கிச் செல்லும் அசைவ பிரியர்களும் தெரிவிக்கின்றனர். கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் மீன்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில் வழக்கம்போல் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் அதன் நிலைப்பாடு அமைந்தது. பல்வேறு வகை மீன்கள் இங்கு விற்கப்படும் நிலையில் வஞ்சிரம் கிலோ ரூபாய் ஆயிரம், கவலை ரூபாய் 100, கானாங்கத்தை கிலோ ரூபாய் 200, சங்கரா ரூ.300, வெள்ளை சங்கரா ரூ.400, கிளி மூக்கு மீன் ரூபாய் 150, பாறை கிலோ ரூபாய் 450, மஞ்ச சங்கரா ரூபாய் 300, ஓரா கிலோ ரூபாய் 200,காலா கிலோ ரூபாய் 300, எறா கிலோ ரூபாய் 300 என பட்டியல் அமைந்திருந்தது. வழக்கத்தை விட மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக வாங்கிய அசைவப் பிரியர்கள் தெரிவித்த நிலையிலும் அதன் விற்பனை கடலூர் பகுதியில் குறைவில்லாமல் நடைபெற்றது. கோடை காலம் தொடங்கிய நிலையில் மீன்கள் விற்பனை ஜரூரராக நடைபெற்றது வியாபாரிகளையும் மகிழ்ச்சியில் ஆற்றியுள்ளது.
அரிய வகை மீன் ‘ஊசி கோளா’பிடிபட்ட மீன் வகைகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் பிடிபடும் அரிய வகை ஊசி கோலா மீன்களும் அடங்கும். பல்வேறு வகை மீன்கள் டன் கணக்கில் பிடிபடும் நிலையில் ஊசி கோளா சில கிலோ அளவிலேயே பிடிபட்டுள்ளதாக மீனவர் நவேந்திரன் தெரிவித்தார். இவை தினமும் பிடிபடும் வகை அல்ல பிடிப்பட்டாலும் குறைந்த அளவிலேயே கிடைக்கும் என்றார்.