ஆசிரியர்கள், மாணவர்கள் சீரிய முயற்சியால் அரசு பள்ளி வளாகத்தில் அடர்வனம்: தலைமை செயலர், ஆணையர் பார்வையிட்டு பாராட்டு

அண்ணாநகர்: ஆசிரியர்கள், மாணவர்கள் சீரிய முயற்சியால், அரசு பள்ளி வளாகத்தில் 5 ஆயிரம் சதுர அடியில் அடர்வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை, தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர். சென்னை முகப்பேரில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி கடந்த 1988ல் கட்டப்பட்டது. இந்த பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 2020ம்  ஆண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முயற்சியால் பள்ளி வளாகத்தில் 5,000 சதுர அடியில் மகிழம், மா, வேம்பு, துளசி, அரளி, போதிமரம், மருதாணி, இயற்கை வகை பூவரசு உள்ளிட்ட ரகங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அடர்வனம் உருவாக்கப்பட்டது.

இந்த மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு தற்போது, வளர்ந்து அழகிய வனப்பகுதி போல் காட்சியளிக்கிறது. மேலும், பச்சை பசேளென பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதுபற்றி அறிந்த தமிழ்நாடு தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அடர்வனம் குறித்து, பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்து, அவர்களை பாராட்டினர்.  இந்த அடர்வனத்தில் வளர்க்கப்பட்ட சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை  அரசு பள்ளி, கல்லூரிகள்  மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு இப்பள்ளி நிர்வாகிகள் இதுவரை  கொடுத்துள்ளனர். அப்பகுதி மக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள்  வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் கூறும்போது, ‘‘அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 5000 சதுர அடி பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டு அடர்வனம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டதால் இந்த அடர்வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விதைபந்து தயாரித்தல், தோட்டம் வளர்த்தல், செடிகளை பராமரித்தல், புதர்களை வெட்டுதல், மியாவாக்கி காடுகளுக்கான பாத்தி அமைத்தல் போன்ற பணிகளில் மாணவர் குழுவினர் சிறப்பாக ஈடுபடுகிறார்கள்.  பறவைகளுக்கு உணவு வைத்தல், பசுமை பயணங்களை மேற்கொள்ளுதல், பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துதல் என பல்வேறு முயற்சிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.  இந்த அடர்வனம் மூலம் தூய காற்று கிடைக்கிறது. பள்ளி வளாகம் பசுமை நிறைந்து காணப்படுகிறது,’’ என்றார்.     

Related Stories: