மெரினா காமராஜர் சாலையில் அச்சுறுத்தும் வகையில் சென்ற 8 சொகுசு கார்கள் மீது வழக்கு: போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை

சென்னை: மெரினா காமராஜர் சாலையில் முறையற்ற நம்பர் பிளேட்டுடன், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சென்ற 8 சொகுசு கார்களை இயக்கியவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னை மெரினா காமராஜர் சாலை, சிவானந்தா சாலையில் நேற்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 சொகுசு கார்கள் ஒரே நேரத்தில் அதிக சத்தத்துடன், வேகமாக இயக்கப்பட்டன. அப்போது, சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து, இதுபற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், போக்குவரத்து போலீசாருக்கு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது. உடனே பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், அதிக வேகமாகவும், முறையற்ற நம்பர் பிளேட்டுடன் வந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள லாம்போகினி, போர்சே, பெராரி உள்ளிட்ட நிறுவனங்களின் 8 சொகுசு கார்களை நேப்பியர் மேம்பாலம் அருகே வழிமறித்து தடுத்து நிறுத்தினர். அதை ஓட்டி வந்தவர்களிடம், அதிக ஒலி எழுவது தொடர்பாக கேட்டபோது, ‘இந்த கார்கள் செல்லும் போது அதிக ஒலி எழுப்பும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் தனிச்சையாக அதிக ஒலி எழுப்பும் வகையில் வடிவமைக்கவில்லை,’’ என்று போக்குவரத்து போலீசாரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் அதை புரிந்துகொண்ட போக்குவரத்து போலீசார், கார்களை இயக்கி வந்த நபர்கள் குடிபோதையில் உள்ளார்களா என்று சோதனை செய்தனர். ஆனால் அவர்கள் யாரும் போதையில் இல்லை என்று தெரியவந்தது. அதைதொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தின் படி முறையான நம்பர் பிளேட் இல்லாததால் 8 சொகுசு கார்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக தலா ரூ.2,500 வசூலித்தனர்.  ஒரே நேரத்தில் 8 சொகுசு கார்கள் காமராஜர் சாலையில் அணி வகுத்து வந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கார்களை இயக்கி வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது, அடையாறு பகுதியில் உள்ள தனியார் சொகுசு கார்கள் பராமரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவிற்கு மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சொகுசு கார்கள் வந்தது தெரியவந்தது.  அதேநேரத்தில், கார் ரசிகர்கள் பலர் சிவனாந்தா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார்கள் முன்பு நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து கொண்டனர்.

Related Stories: