கோயில் விழாக்களில் குறவன், குறத்தி ஆட்டத்துக்கு தடை

சேலம்: கோயில் விழாக்களில் குறவன், குறத்தி ஆட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட 100 கலைகள் அடங்கிய கலைப்பட்டியலில், குறவன்- குறத்தி ஆட்டம் இடம் பெற்றிருந்தாலும், இக்கலைப்பிரிவில் உறுப்பினராக இதுவரை எவரும் பதிவு செய்யவில்லை என்பதால், வரிசை எண்.40-ல் இடம் பெற்றுள்ள குறவன்- குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து கலை பண்பாட்டு துறை இயக்குநர் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், கரகாட்டம் உட்பட ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும், குறவன்- குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித்து ஆணை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.  இயக்குநரின் கருத்துருவை பரிசீலனை செய்தும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புரையை செயல்படுத்தும் விதமாகவும், ‘குறவன்- குறத்தி ஆட்டம்’ என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு ஆணையிடுகிறது.

மேலும், கரகாட்டம் என்ற பெயரிலும் ஆடல்- பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன்- குறத்தி ஆட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை  தமிழ்நாடு குறவன், பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க முன்னாள் மாநில துணை செயலாளர் செந்தில்குமார் வரவேற்று, தமிழ்நாடு முதல்வருக்கும், இதற்காக போராடிய அனைத்து சங்கத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: