வைகோவுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு: இலங்கை தமிழர் உரிமைக்காக முக்கிய பங்காற்றியவர் வைகோ என பேட்டி

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். சமீபத்தில் விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், பிரபாகரன் தம்மை இலங்கைக்கு அழைத்தது பற்றி விவரித்திருந்தார். குறிப்பாக அந்த பேட்டியில் வைகோவை, பிரபாகரன் அழைக்கவில்லை போன்று திருமாவளவன் சொல்லியதாக மதிமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கினர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேற்று காலை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நேர்காணல் குறித்து திருமாவளவன் விளக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பை தொடர்ந்து வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சட்டக் கல்லூரி மாணவராக இருந்த திருமாவளவன் கல்லூரிகளில் இலங்கை தமிழர் குறித்து ஆதரித்து பேசுவதற்கு என்னை அழைத்து சென்றவர். நேர்காணலில் திருமாவளவன் கேள்வியை கடந்து சென்ற விதம் தேவையற்ற, நியாயமற்ற விமர்சனம் வெளிவர ஆரம்பித்தது. இன்று சந்திக்கும் போது உங்கள் மீது எந்த வருத்தமும் இல்லை என்று நான் தெரிவித்தேன்’’ என்றார்.

இதையடுத்து, திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தனியார் தொலைக்காட்சியில் நெறியாளர் குதர்க்கமாக கேட்ட கேள்விக்கு நான்  பதிலளிக்காமல் சென்றது விமர்சனத்துக்குள்ளாகியது. அண்ணன் வைகோவை பொறுத்தவரை, இலங்கை தமிழர் பிரசினைக்கும், அவர்களது உரிமைக்காகவும் மிகப் பெரிய  பங்காற்றியவர் வைகோ என்பதை நாடறியும். தமிழக அரசியலில் மதிமுக  மிகப் பெரிய இடத்தை அடைந்திருக்க முடியும். ஆனால் மதிமுக பின்னடவை  சந்தித்தற்கு இலங்கை தமிழர் பிரசினை ஒரு காரணம் என்பது வரலாறு’’ என்றார்.

Related Stories: