பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் குறைதீர் முகாம்

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அவ்வப்போது மக்கள் குறைதீர் முகாம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 36வது வார்டு எருக்கஞ்சேரி சூழ்புனல் கரை பகுதியில் மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் தலைமை வகித்தார். முகாமில் தண்டையார்பேட்டை மண்டல உதவி செயற்பொறியாளர் ஹரிநாத், குடிநீர் வாரிய அலுவலர் தேவி, சுகாதாரத்துறை ஆய்வாளர் சதீஷ், தெருவிளக்கு பராமரிப்பு அலுவலர்கள், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் குறைகள் கேட்டு அறியப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டியுள்ளது குறித்தும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். வேகத்தடை அமைப்பது, தெருவிளக்கு அமைப்பது, பல்வேறு இடங்களில் பட்டா வழங்காமல் உள்ள வீடுகளுக்கு பட்டா வசதி செய்து தரும்படி கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

மேலும், தாழ்வான இடங்களில் உள்ள மின் பகிர்மான பெட்டிகளை உயர்த்தி தரும்படியும், அப்பகுதியில் 200 ஆண்டுகளாக உள்ள பெருமாள் கோயிலை சீரமைத்துத் தரும்படியும் கோரிக்கை வைத்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இந்த குறைதீர் முகாமில் மாமன்ற உறுப்பினர் மலைச்சாமி, பகுதி திமுக செயலாளர் ஜெயராமன், மாவட்ட துணைச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: