சென்னை: மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம், மகளிருக்கு சுய உதவி என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி எல்லா வகையிலும் சிறப்பாக உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் கூறினார். சென்னை, ஐசிஎப் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள் என்கின்ற பெயரில் சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் மேற்கு பகுதி திமுக சார்பில் ``அயல்நாடு போற்றும் தமிழ்நாடு” என்கின்ற தலைப்பில் புகழரங்கம் நிகழ்ச்சி நடந்தது. வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளரும், 8வது மண்டல குழு தலைவருமான கூ.பி.ஜெயின் ஏற்பாட்டில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு புகழரங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ எம்.சரவணன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் ஆண்டியப்பன், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவர் நாகேஸ்வரன் அருள்ராசா, மொரீசியஸ்- மகாத்மா காந்தி கல்வி ஆய்வு மைய தமிழ் துறை தலைவர் ஜீவன் செம்மண் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினர்.
